fontsize: 60% 70% 80% 90%

மத்தியக் கிழக்கில் ஜோ பைடன்

ஜெருசலம்
இஸ்ரேலியர்களும் பாலஸ்தீனர்களும் மீண்டும் பேச்சு வார்த்தையைத் தொடங்கச்செய்யும் நோக்கத்துடன் அமெரிக்கத் துணை அதிபர் ஜோ பைடன் திங்கட்கிழமை இஸ்ரேல் சென்று சேர்ந்தார்.
பைடனின் நான்கு நாள் வருகையின்போது, ஈரானின் அணுவாயுதத் திட்டத்தை ஒடுக்குவதில் அமெரிக்கா கடப்பாடு கொண்டிருப்பதாக இஸ்ரேலியத் தலைவர்களுக்கு பைடன் உறுதியளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வியாழக்கிழமை டெல் அவிவ் நகரில் உரையாற்றும்போது, இஸ்ரேலியப் பொதுமக்களின் ஆதரவையும் அவர் திரட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா சென்ற ஆண்டு எகிப்து, துருக்கி, சவுதி அரேபியா ஆகிய நாடுகளுக்கு வருகை மேற்கொண்டார். ஆனால் இஸ்ரேலுக்கு அவர் வருகை மேற்கொள்ளாததால், இஸ்ரேலை அவர் புறக்கணிப்பதாக இஸ்ரேலியர்கள் சிலர் கருதுகின்றனர்.
சென்ற ஆண்டு ஜூன் மாதம் கெய்ரோவில் பேசிய ஒபாமா, மத்திய கிழக்கின் அமைதி முயற்சிக்குத் தலையாய முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று உறுதி கூறினார்.
ஆனால், அமைதி முயற்சியைச் சிறப்புத் தூதர் ஜார்ஜ் ஜே.மைக்கலிடம் ஒப்படைத்துவிட்டு, அதிபர் ஒபாமா நேரடி ஈடுபாட்டைத் தவிர்ப்பதாகக் கருதப்படுகிறது.
இதற்கிடையே, இஸ்ரேலும் பாலஸ்தீனர்களும் நேரடியற்ற பேச்சு நடத்த இணங்கி யிருப்பதாக சிறப்புத் தூதர் திங்கட்கிழமை அறிவித்தார்.
- வாஷிங்டன் போஸ்ட்

Copyright © 2006 Singapore Press Holdings Ltd. Co. Regn. No. 198402868E. All rights reserved.
82, Genting Lane, Singapore 349567 Tel: 6388 3838