fontsize: 60% 70% 80% 90%

சொத்துச் சந்தையைத் தணிக்க இப்போதைக்கு மேலும் நடவடிக்கைகள் இல்லை: அமைச்சர் மா

சொத்துச் சந்தையில் நிலவும் பரபரப்பைத் தணித்திட இப்போதைக்கு மேற்கொண்டு புதிய நடவடிக்கைகள் எதையும் அரசாங்கம் அறிமுகப்படுத் தாது என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் மா போ டான் கூறியிருக்கிறார்.
நாடாளுமன்றத்தில் நேற்று பேசிய திரு மா, சொத்துச் சந்தையில் மீண்டும் பரபரப்பு அதிகரிப்பதாக அறிகுறிகள் தென்பட்டால், சந்தையை நிலைப்படுத்த அரசாங்கம் கூடுதல் நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தும் என்றார்.
வாங்கிய தேதியிலிருந்து ஔராண்டுக்குள் விற்கப்படும் அனைத்து தனியார் வீடுகளுக்கும் குடியிருப்பு நிலங்களுக்கும் முத்திரை வரி விதிக்கப்படும் என்று தேசிய வளர்ச்சி அமைச்சு சென்ற மாதம் அறிவித்தது.
அதோடு, தனியார் சொத்தின் மதிப்பில் 80% வரை மட்டுமே வீட்டுக் கடன் எடுக்கலாம் என்ற கட்டுப் பாடும் விதிக்கப்பட்டது. தற்போது 90% வரை கடன் எடுக்கமுடியும். சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம், வட்டி ஏற்புத் திட்டத்தையும், வட்டி மட்டுமே கட்டும் வீட்டுக் கடன் திட்டத்தையும் அமைச்சு அகற்றியது.
நில ஒதுக்கீட்டை மேலும் பொறுப்புள்ளதாக ஆக்க, அரசாங்கம் ஒதுக்கீட்டு நிலப்பகுதிகள் திட்டத்தில் மாற்றங்கள் செய்யவுள்ளதாக திரு மா அறிவித்தார்.
இதன்படி ஒதுக்கீட்டுப் பட்டியலிலுள்ள நிலப் பகுதிகளை வாங்குவோர் கட்ட வேண்டிய வைப்புத்தொகை 5%லிருந்து 3% ஆகக் குறைக்கப்படுகிறது.
அரசாங்கம் உடனடியாக அமலாக்கும் இந்த மாற்றத்தின் கீழ், நிலப்பகுதியின் குறைந்த பட்ச விலையில் 3% அல்லது அதிகபட்சமாக $5 மில்லியன் மட்டுமே வைப்புத்தொகையாகக் கட்டவேண்டும். நில மேம் பாட்டாளர்களின் தொடக்கச் செலவுகளையும் ரொக்கப் புழக்கச் சுமையையும் குறைக்க உதவுவது இதன் நோக்கம்.
மேலும், ஒதுக்கீட்டுப் பட்டியலிலுள்ள ஒரு நிலப்பகுதியை வாங்க ஒன்றுக்கும் மேற்பட்ட தரப்பினர் குறைந்தபட்ச விலைகளைத் தாக்கல் செய்தால், அதை விற்பனைக்கு விடுவது பற்றி பரிசீலிக்கப்படும்.
எனவே, அரசாங்கம் நிர்ணயித்திருக்கும் விலையை விட குறைவான விலையைக் குறிப்பிடும் விண்ணப்பங்கள் கிடைத்தாலும், பொது ஏலக்குத்தகை முறையில் நிலப்பகுதி விற்பனைக்கு விடப்படலாம்.
இவ்வாண்டு இரண்டாம் பாதியில், ஒதுக்கீட்டுப் பட்டியலிலிருந்து மேலும் பலதரப்பட்ட நிலப்பகுதிகள் விற்பனைக்கு விடப்படும் என்றும் திரு மா தெரிவித்தார்.

Copyright © 2006 Singapore Press Holdings Ltd. Co. Regn. No. 198402868E. All rights reserved.
82, Genting Lane, Singapore 349567 Tel: 6388 3838