fontsize: 60% 70% 80% 90%

அணுசக்தி சாத்தியம் ஆராயப்படும்: எஸ்.ஈஸ்வரன்

அணுசக்தி உபயோகிக்கும் சாத்தியத்தை வர்த்தகத் தொழில் அமைச்சின் தலைமையில் பற்பல அமைப்புகள் இணைந்து ஆராயவிருக்கின்றன.
பொருளியல் உத்திகள் குழு செய்த அணுசக்தி பரிந்துரையை ஆராயும் பணி இவ்வாண்டு பிற்பகுதியில் தொடங்கும்.
அணுசக்தியை முழுமை யாகப் புரிந்துகொண்டு, அதிலுள்ள வாய்ப்புகள், சவால்கள், ஆபத்துகள் ஆகியவற்றை மதிப்பிடுவது ஆய்வின் நோக்கம் என்று வர்த்தகத் தொழில் அமைச்சின் மூத்த துணை அமைச்சர் திரு எஸ் ஈஸ்வரன் நாடாளுமன்றத்தில் கூறினார்.
அணுசக்தியின் பல்வேறு அம்சங்களும் கவனமாகவும், நுணுக்கமாகவும் ஆராயப்படும் என்றார் அவர்.
சிங்கப்பூர் ஏன் அணுசக்தி சாத்தியத்தை ஆராய்கிறது என்பதற்கும் திரு ஈஸ்வரன் விளக்கம் அளித்தார்.
சிங்கப்பூரின் எரிசக்தி பாதுகாப்பை அணுசக்தி மேம்படுத்தக்கூடும் என்று அவர் தெரிவித்தார்.
அதோடு, பிரான்ஸ், ஜப்பான் போன்ற வளர்ச்சியடைந்த நாடுகள் நெடுங்காலமாக அணுசக்தியைப் பயன்படுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் பல நாடுகள் அணுசக்தியை உபயோகிக்கும் சாத்தியத்தைப் பரிசீலித்து வருகின்றன.
இவையனைத்தும் உயர் வாழ்க்கைத்தரமும் பாதுகாப்பு வழிமுறைகளையும் கொண்ட வளர்ச்சியடைந்த நாடுகளாகும்.
வியட்னாம், தாய்லாந்து, மலேசியா, இந்தோனீசியா ஆகிய நாடுகளும்கூட அணுசக்தி உபயோகிக்கும் சாத்தியத்தை ஆராயத் தொடங்கியிருப்பதாகவும்
திரு ஈஸ்வரன் சுட்டிக் காட்டினார்.
அணுசக்தியின் பாதுகாப்பை மேம்படுத்த புதிய தொழில் நுட்பங்கள் உருவாக்கப்படுவ தாகவும் அவர் சொன்னார்.
“அணுசக்தி தொடர்பான முக்கிய அக்கறைகளுக்குத் தீர்வு காணவும், அணுசக்தி சாதனத்தைக் குறைந்த செலவில், பாதுகாப்பான சிறிய அளவில் உருவாக்கவும் புதிய தொழில்நுட்பங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
இவற்றில் சில தொழில் நுட்பங்கள் வர்த்தகமயத்தின் ஆரம்பக்கட்டத்தில் உள்ளன. இவை நமக்குச் சாத்தியப்படுமா என்பது ஆராயப்படவேண்டும்” என்றார் அவர்.
மேலும், மருத்துவத்திற்கும் புற்றுநோய் சிகிச்சைக்கும் அணுசக்தி அறிவியல் பயன் படும் என்பதால், அணுசக்தி ஆற்றலை வளர்த்துக் கொள்வதால் பலனுண்டு என்றார் திரு ஈஸ்வரன்.

Copyright © 2006 Singapore Press Holdings Ltd. Co. Regn. No. 198402868E. All rights reserved.
82, Genting Lane, Singapore 349567 Tel: 6388 3838