‘பேய்விரட்டல்’ வழக்கு தொடுத்த பெண்ணுக்கு எதிராகத் திவால் மனு
Tue, 09/03/2010கத்தோலிக்க தேவாலயம், இரண்டு பாதிரியார்கள், ஆறு தேவாலய வழிபாட்டாளர்கள் ஆகியோருக்கு எதிராக ‘பேய்விரட்டல்’ சம்பவம் தொடர்பாக வழக்கு தொடுத்து தோற்ற பெண், இப்போது திவால் மனுவை எதிர்நோக்குகிறார். ஐம்பத்துமூன்று வயதாகும் திருவாட்டி அமுதவள்ளி கிருஷ்ணன் 2006ம் ஆண்டு வழக்கு தொடுத்தவர்களில் மூன்று தேவாலய வழிபாட்டாளர்கள், திருவாட்டி அமுதவள்ளியைத் திவாலாக்க நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். திரு பென்னி டான் ச்சின் பெங், திரு நஸ்ரொம் அப்துல்லா, குமாரி சியோங் லாய் மெங் ஆகிய மூவருக்கும் திருவாட்டி அமுதவள்ளி மொத்தம் $150,000 தர வேண்டும். இவர் தொடுத்த வழக்கில் தோல்வியடைந்ததால், மூவருக்கும் நேர்ந்த செலவுக்காக இத்தொகையைத் தருமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.திருவாட்டி அமுதவள்ளி, அத் தொகையை வழிபாட்டாளர்களுக்குக் கொடுக்காததால், அவருக்கு எதிராகத் திவால் மனு தாக்கல் செய்யப்பட்டது. திவால் மனு இம்மாதப் பிற்பகுதியில் உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும்.தன்மீது வழக்கு தொடுத்த மூவருக்கும் பணம் தர தன்னிடம் வசதியிருந்தாலும், அவ்வாறு செய்வது தனது கொள்கை களுக்குப் புறம்பானது என்ற காரணத்தால் பணம் தரப்போவதில்லை என்று ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ் பத்திரிகையிடம் திருவாட்டி அமுதவள்ளி கூறினார்.