fontsize: 60% 70% 80% 90%

குண்டுவெடிப்புகளுக்கு இடையே தேர்தல்

பீரங்கிக் குண்டுகளும் மற்ற வகையான குண்டுகளும் ஈராக் தலைநகர் பாக்தாத்தை உலுக்க அந்நாட்டில் நேற்று இரண்டாம் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது.
ஈராக்கில் 2003ம் ஆண்டில் முன்னாள் சர்வாதிகாரி சதாம் ஹுசேனைப் பதவியில் இருந்து வீழ்த்திய பின் நடைபெறும் இரண்டாவது நாடாளு மன்றத் தேர்தல் இது.
இந்தத் தேர்தலை சீர்குலைக்க அல் காய்தா பயங்கரவாத இயக்கம் ஏற்கனவே எச்சரித்திருந்தது.
அதுபோல் ஈராக்கிய மக்களையும் அவ்வியக்கம் தேர்தலில் பங்கேற்க வேண்டாமென்று எச்சரிக்கை விடுத்து ஆங்காங்கே துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து வந்தது.
தங்களுடைய எச்சரிக்கைக்கு ஏற்ப அல் காய்தா பயங்கரவாதிகள் ஈராக்கியத் தலைநகரின் கடுமையான பாதுகாப்பு வளையத்தைக் கொண்டுள்ள ‘ கிரீன் சோன்’ எனப்படும் முக்கிய அமைச்சுகள் மற்றும் வெளிநாட்டுத் தூதரகங்கள் உள்ள இடத்தில் 10 பீரங்கிக் குண்டுகளையும், நான்கு சாதாரண குண்டுகளையும் பொழிந்தன.
இதில் ஒருவர் மரணமடைந்தார் என்றும் மேலும் பலர் காயம் அடைந்தனர் என்றும் ஏஎப்பி செய்தித் தகவல் தெரிவிக்கிறது.
இதேபோல், தலைநகர் பாக்தாத் துக்கு 60 கிலோமீட்டர் வடக்கே உள்ள 5 வாக்குச் சாவடிகளில் குண்டுகள் வெடித்ததாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தத் தேர்தலுக்கென்றே பாக்தாத்தில் மட்டும் 200,000 பாதுகாப்புப் படையினர் பணியில் அமர்த்தப்பட்டிருந்தனர்.
இந்த குண்டு வெடிப்புகள் ஆங்காங்கே நிகழ்ந்த வண்ணம் இருந்தபோதும் ஈராக்கிய மக்கள் தேர்தலில் உற்சாகமாகவே பங்கேற்றதாகக் கூறப்படுகிறது.
இந்தத் தேர்தல் பற்றிக் கருத்துரைத்த 57 வயது பாக்தாத்வாசியான அபு அடெல் என்பவர்,
“ தேர்தலில் பங்கு பெறுவது ஜனநாயகக் கடமை.
“ ஒவ்வொரு ஈராக்கியரும் இதில் பங்கெடுக்க வேண்டும்,” என்று கூறியதாக ஏஎப்பி செய்தித் தகவல் கூறுகிறது.
இதற்கிடையே, இந்தத் தேர்தலில் ஈராக்கின் சன்னி முஸ்லிம்கள் பெருவாரியாகப் பங்குபெறுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவர்கள் 2005ல் நடைபெற்ற முதல் நாடாளுமன்றத் தேர்தலைப் புறக்கணித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் ஈராக்கில் ஷியா, சன்னி முஸ்லிம்களுக்கு இடையிலான பிளவு அதிகரித்து அதன் தொடர்பிலான வன் முறையில் பலர் கொல்லப்பட்டனர்.

Copyright © 2006 Singapore Press Holdings Ltd. Co. Regn. No. 198402868E. All rights reserved.
82, Genting Lane, Singapore 349567 Tel: 6388 3838