காமலீலை வீடியோ சர்ச்சைக்குள்ளான சுவாமி நித்யானந்தா வீடியோ மூலம் முதல் முறையாக பேசியுள்ளார்.
தான் குற்றச் செயல்கள் எதிலும் ஈடுபடவில்லை என தலைமறைவாக உள்ள இடத்தில் இருந்து சி.டி மூலம் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
தமக்கு ஆதரவான உண்மைகளை சேகரித்து வருவதாகவும் நித்யானந்தா தெரிவித்துள்ளதாக இந்திய பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.
“நானோ அல்லது எனது அமைப்போ சட்டவிரோதமாக எதையும் செய்யவில்லை. எங்களுக்கு சாதகமான ஆதாரங்களை நாங்கள் திரட்டி வருகிறோம்.
“எனக்கும், எனது அமைப்புக்கும் எதிரான பொய்யான, உள்நோக்கத்துடன் கூடிய பிரசாரதத்தை எதிர்கொண்டு முறியடிப்போம்.
“விரைவில் உரிய ஆதாரங்களுடன் எனக்கு எதிரான புகார்கள் பொய் என்பதை நிரூபிப்பேன்,” என்று நித்யானந்தா சி.டியில் பேசியுள்ளார்.
சென்னையில் உள்ள அவரது வழக்கறிஞர் {தருக்கு தனது பேச்சுகள் அடங்கிய சி.டி.யை சாமியார் அனுப்பி வைத்துள்ளதாகவும் வழக்கறிஞர் அதனை பத்திரிகைகளுக்கு அனுப்பியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
“எனக்கு எதிராகவும், எனது தியான பீடத்திற்கு எதிராகவும் சிலர் விஷமத்தனமான, பொய்யான அவதூறான பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
“இந்த சட்டவிரோதப் பிரசாரத்தை எதிர்கொண்டு அதை முறியடிப்பேன்,” என்று நித்யானந்தா அந்த சி.டியில் கூறியுள்ளார்.
ரஞ்சிதா விவகாரத்தைத் தொடர்ந்து தலைமறைவான நித்யானந்தா தற்போதுதான் முதல் முறையாக விளக்கம் அளித்துள்ளார்.
அதேசமயம், ரஞ்சிதா குறித்த விளக்கத்தை நித்யானந்தா வெளியிடவில்லை.
அதேபோல காமலீலை புகார்கள், பக்தை கொலை உள்ளிட்டவை குறித்தும் அவர் விளக்கம் தரவில்லை.
விரைவில் அவர் விரிவான விளக்கத்தை அளிப்பார் என்று அவரது தியான பீட இணையத் தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகை ரஞ்சிதாவுடனான காமலீலை வீடியோ சர்ச்சையில் சிக்கிய பின்னர் நித்யானந்தாவைக் காணவில்லை.
அவர் எங்கு இருக்கிறார் என்பதும் தெரியவில்லை.
நித்யானந்தா மீது, தமிழ்நாடு கர்நாடக மாநிலங்களில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
இந்நிலையில் அவரது சி.டி வெளியிடப்பட்டுள்ளது.
“அன்பான பக்தர்களே,” என்று அந்த சி.டி.யில் நித்யானந்தா தமது பேச்சைத் தொடங்கி உள்ளதாகக் கூறப்படுகிறது.
உலகெங்கும் இருந்தும் ஆயிரக்கணக்கானவர்கள் பல வழிகளில் ஆதரவு தெரிவித்து வருவதாகவும், அண்மைய சர்ச்சைகளால் அவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளதாகவும் சாமியார் அதில் குறிப்பிட்டுள்ளார்.
தமது போதனைகளால் பலன் பெற்றோர் பலரும் தமக்கு எதிரான புகார்களை நிராகரித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
தமக்கு எதிரான புகார்கள் பொய்யானவை என தாம் நிரூபிக்கும் வரை தமது ஆதரவளார்களை பொறுமையுடன் காத்திருக்கு மாறும், அவசரப்பட்டு எந்தத் தீர்ப்புக்கும் வர வேண்டாம் என்றும் அதில் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்நிலையில் நித்யானந்தருக்கு எதிராக புகார் அளிக்கும் படி ரஞ்சிதா வற்புறுத்தப்படுவதாக நித்யானந்த தியான பீடச் செய்தித் தொடர்பாளர் நித்ய ஆத்ம பிரமானந்தா கூறியுள்ளார்.
இந்த விவகாரத்தில் ரஞ்சிதாவின் வாக்குமூலம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
சாமியாருக்கு எதிரானவர்கள் ரஞ்சிதாவிடம் புகார் அளிக்கும்படி நிர்பந்திக்கின்றனர் என்றும் அதற்கு அவர் உடன்பட வில்லை என்றும் கூறப்படுகிறது.
நித்யானந்தருக்கு எதிராக புகார் அளிக்க அவர் திட்டவட்டமாக மறுத்து விட்டதாக ரஞ்சிதாவுக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர்.
இதற்கிடையே நித்யானந்தா மீது புகார் கொடுத்த சீடர் லெனின் காந்தப்படுக்கை மோசடி வழக்கில் சிக்கியவர் என்று செய்தி வெளியாகி உள்ளது.
“நடிகை ரஞ்சிதாவும், நித்யானந்தா சாமியாரும் ஒன்றாக இருப்பது போன்ற படங்களை நான்தான் எடுத்தேன்,” என்று இவர் போலிசில் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார்.
இவர் கொடுத்த புகாரின் பேரில் நித்யானந்தா மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.