இலங்கையின் இறுதிக் கட்டப் போரில் நிகழ்ந்த மனித உரிமை மீறல்கள் குறித்து ஆராயக் குழு அமைக்கும் ஐ.நா.வின் நடவடிக்கைக்கு இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
இத்தகைய குழு “தேவையில்லாதது,” என்று ராஜபக்சே கூறியுள்ளார்.
“இந்த நடவடிக்கையை இலங்கை ஏற்றுக் கொள்ளாது,” என்றும் அவர் சொன்னார்.
இலங்கையில் ராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்த போர் உச்சக்கட்டத்தை அடைந்தபோது இரு தரப்பினராலும் போர்க்கால குற்றங்கள் புரியப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
மனித உரிமைகள் மீறப்பட்டதாகக் கூறப்படும் புகார்களுக்கு விளக்கம் தேவை என மனித உரிமை ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், தான் எந்தக் குற்றமும் புரியவில்லை என இலங்கை அரசு கூறி வருகிறது.
அமெரிக்க அரசு கடந்த அக்டோபரில் பட்டியலிட்ட உரிமை மீறல் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் குறித்து இலங்கையில் ஏற்கனவே குழுவொன்று ஆராய்ந்துக் கொண்டிருப்பதாகவும் ராஜபக்சே சுட்டியுள்ளார்.
இந்நிலையில் தமிழர்கள் மறுவாழ்வு குறித்து ராஜபக்சேயுடன் ஆலோசனை நடத்த இந்திய வெளியுறவு செயலாளர் நிருபமா ராவ் இலங்கை சென்றுள்ளார்.
இதற்கிடையே, தமது குடும்பத்தினருடன் தொலைபேசியில் உரையாட மறுக்கப்பட்டதால் ஜெனரல் சரத் பொன்சேகா சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளதாக அவரது மனைவி அனோமா தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டில் வசிக்கும் மகள்களுடன் உரையாட பொன்சேகாவுக்கு உரிமை மறுக்கப்பட்டுள்ளது.
எனவே இக்கோரிக்கை நிறைவேறும் வரை சாகும் வரை உண்ணாவிரதத்தை சரத் பொன்சேகா தொடங்கியுள்ளார்.