அமெரிக்காவின் வேலை வாய்ப்பு நிலவரம் எதிர்பார்த்ததைவிட மேம்பட்டிருந்தாலும், சகித்துக்கொள்ளக்கூடிய நிலையை இன்னும் அடையவில்லை என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கூறியிருக்கிறார்.
வேலையின்மை விகிதம் அமெரிக்காவில் இன்னும் அதிகமாகவே இருப்பதாகவும் ஆனால் வேலை வாய்ப்பு நிலவரம் எதிர்பார்த்ததைக் காட்டிலும் மேம்பட்டிருப்பதாகவும் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட வேலை வாய்ப்பு பற்றிய அறிக்கை கூறுகிறது. வேலையின்மை விகிதம் முந்திய மாதத்திலிருந்து மாறாதிருந்தாலும், பல மில்லியன் அமெரிக்கர்களுக்கு இன்னும் வேலை இல்லை.
வேலையின்மை விகிதம் மாறாமல் நிலையாக இருப்பது போதாது என்றும் ஒபாமா குறிப்பிட்டிருக்கிறார்.
அதிபர் ஒபாமா வெர்ஜினியா மாநிலத்தில் உள்ள ஒரு நிறுவனத்திற்கு (எரிசக்தியை சிக்கனப்படுத்துவதற்கு உதவும் நிறுவனம்) சென்றிருந்தபோது வேலை வாய்ப்பு நிலவரம் பற்றி கருத்துரைத்தார்.
சென்ற மாதம், அமெரிக்காவில் எதிர்பார்த்ததைவிட குறைவான வேலைகளே இழக்கப்பட்டன. இதனால், வேலையின்மை விகிதம் எந்தவித மாற்றமும் இல்லாமல் 9.7 விழுக்காடாகவே இருந்தது. சென்ற மாதம் மொத்தம் 36,000 வேலைகள் அமெரிக்காவில் இழக்கப்பட்டன. வேலை இழப்புகள் இதைவிட மோசமாக இருக்குமென்று எதிர்பார்த்திருந்த ஆய்வாளர்கள் பலரும் இதனால் ஆச்சரியமடைந்தனர்.
ஆனால், வேலையின்மை விகிதம் மேலும் மேம்படவேண்டும் என்று அதிபர் ஒபாமா கூறுகிறார். “நாம் எதிர்பார்த்ததைவிட நிலவரம் ஔரளவு மேம்பட்டிருந்தாலும், சகித்துக்கொள்ளக்கூடிய நிலை இதுவல்ல” என்றார் அவர். “இன்னும் ஏகப்பட்ட அமெரிக்கர்கள் வேலையின்றி இருக்கிறார்கள்.
“ஏராளமான குடும்பங்கள் பொருளியல் நெருக்கடிக்கு இடையில் வாழ்க்கை நடத்த போராடுகின்றன” என்றார் அவர்.
ஈராண்டுகளுக்கு முன்பு, அமெரிக்காவில் பொருளியல் மந்தநிலை தொடங்கியதிலிருந்து இதுவரை 8.5 மில்லியன் வேலைகள் இழக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவில் இன்னும் மில்லியன் கணக்கானோர் வேலையில்லாமல் இருக்கின்றனர். கிட்டத்தட்ட 14.9 மில்லியன் பேர் வேலையில்லாமல் இருப்பதாக அறிக்கை கூறுகிறது.
பிப்ரவரி மாதம் கூடுதலாக 36,000 வேலைகளை இழந்தபோதிலும் இது எதிர்பார்த்ததைவிடக் குறைவுதான் என்று அதிபர் ஒபாமா கூறினார்.
அந்த மாதம் அமெரிக்க கிழக்கு கடலொரப் பகுதிகளை கடும் புயல் தாக்கியதால் அமெரிக்கப் பொருளியல் பெரிதும் பாதிக்கப்பட்டதே அதற்குக் காரணம் என்று அவர் சொன்னார்.
அமெரிக்கர்களுக்கான சுகாதார கவனிப்பு திட்டத்திற்கு ஆதரவு திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ஒபாமா, வேலையில்லாமல் இருக்கும் அமெரிக்கர்களுக்கு உதவிகளை வழங்குவதே தமது முதல் பணி என்று கூறினார்.
அமெரிக்க நிறுவனங்கள் மீண்டும் ஊழியர்களை சேர்க்கும் வரை தான் ஔயமாட்டேன் என்றும் அவர் தெரிவித்தார். இந்த வாரத் தொடக்கத்தில் அமெரிக்க நாடாளுமன்றம் நிறைவேற்றிய ஒரு மசோதா, சட்டமாக்கப்படுவதற்கு திரு ஒபாமா அந்த மசோதாவில் கையெழுத்திட்டார்.
சிரமமான காலக் கட்டத்தில் வேலை இழந்தவர்களுக்கு வேலையின்மை காப்புறுதி அளிப்பதற்கும் அந்த சட்டம் வகை செய்கிறது.