fontsize: 60% 70% 80% 90%

சமய வேறுபாடுகளுக்கு சமரசம்: திரு சண்முகம்

Bookmark and Share

சிங்கப்பூரில் சமயம் தொடர்பான கருத்து வேறுபாடுகள் சமரசப் பேச்சுவார்த்தை மூலம் அல்லது அடித்தள அளவில் பொது அறிவால் தீர்க்கப்படுகின்றன என்று சட்ட மற்றும் 2ம் உள்துறை அமைச்சர் கே.சண்முகம் கூறினார்.
நாடாளுமன்றத்தில் வரவு செலவுத் திட்ட விவாதத்தின்போது நேற்று அமைச்சர் சண்முகம் பேசினார்.
வெவ்வேறு மதத்தினரும் தங்கள் சொந்த சமய விருப்பங்களை அதிக ஆர்வத்தோடும் உணர்வு பூர்வமாகவும் மேற்கொள்வதால் இன, சமய வேறுபாடுகள் சமூக நல்லிணக்கத்திற்கு சில சவால்களை விடுப்பதாக அவர் கூறினார்.
இந்தப் பிரச்சினைகள், சமூக அடித்தள அமைப்பு மற்றும் சமயத் தலைவர்களின் தார்மீக வலியுறுத்தலாலும் தீர்க்கப்படுகின்றன என்றும் அமைச்சர் விவரித்தார்.
ஆனால் இதுபோன்ற தீர்வுகள் சில சமயம் போதுமானவையாக இருப்பதில்லை என்பதையும் அமைச்சர் சுட்டினார்.
“இது போன்ற நேரங்களில் அதிகாரிகள் தலையிட்டு பிரச்சினையைச் சமாளிப்பார்கள்,’’ என்று அமைச்சர் சண்முகம் வலியுறுத்தினார்.
சட்டத்தை மீறுவோருக்கு இன்னும் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று சில நாடாளுமன்ற உறுப்பினர்களின் பரிந்துரைத்தனர்.
அதற்கு, இது போன்ற கடுமையான அரசு நடவடிக்கைகள் குறைவாக நடப்பதே சிறந்தது என்று திரு சண்முகம் குறிப்பிட்டார்.
பல்வேறு அமைப்புகளுக்கும் தலைவர்களுக்கும் இடையே பரஸ்பர புரிந்துணர்வே சமயம் தொடர்பான கருத்துவேறுபாடுகளுக்கு நீண்ட நாள் தீர்வு என்றார் அமைச்சர் சண்முகம்.
தவிர ரிசோர்ட்ஸ் வோர்ல்டு செந்தோசாவில் நிறுவப்பட்ட கசினோவின் சட்ட ஒழுங்குப் பிரச்சினை கட்டுக்குள்ளேயே உள்ளது என்று குறிப்பிட்ட அமைச்சர், கசினோவோடு தொடர்புடைய பலதரப்பட்ட மிரட்டல்களையும் உள்துறை அமைச்சு அணுக்கமாகக் கண்காணித்து வருகிறது என்றார்.
உல்லாசத் தளங்கள் முக்கியச் சின்னங்களாக இருப்பதால் அவை பயங்கரவாதிகளின் இலக்காக இருக்க வாய்ப்புள்ளது என்று அமைச்சர் சுட்டினார்.
மேலும் கடன் முதலைப் பிரச்சினை, தீய பழக்கங்கள், திட்டமிட்ட குற்றங்கள் போன்ற பல்வேறு குற்றங்களையும் கசினோக்கள் ஈர்க்கும் என்று அவர் சொன்னார்.
பல தரப்பட்ட குற்றவியல் பிரச்சினைகளையும் சமாளிக்கும் திறன் சிங்கப்பூருக்கு உண்டு என்ற அமைச்சர், உள்துறை அமைச்சின் வளங்களை அதிகரிப்பதற்கு ஓர் எல்லை உண்டு என்றார்.
உள்துறை அமைச்சை வலுப்படுத்த தொழில் நுட்பத்தில் முதலீடு செய்து, இருக்கும் வளங்களை ஆக்ககரமாகப் பயன்படுத்தி, தன¬யார் துறை மற்றும் சமூக அமைப்புகளுடன் கூட்டாகச் செயல்படவேண்டும் என்று அமைச்சர் சண்முகம் அறிவுறுத்தினார்.

Copyright © 2006 Singapore Press Holdings Ltd. Co. Regn. No. 198402868E. All rights reserved.
82, Genting Lane, Singapore 349567 Tel: 6388 3838