கோலாலம்பூர்
மலேசிய எதிர்க்கட்சித் தலைவர் டத்தோ { அன்வர் இப்ராஹிமின் பிகேஆர் கட்சியிலிருந்து முன்னாள் விசுவாசிகள் சிலர் நேற்று அடுத்தடுத்து விலகிக் கொண்டனர்.
பினாங்கு மாநில நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும் அவர்களில் அடங்குவார்.
நிபொங் டெபால் நாடாளுமன்ற உறுப்பினர் டான் டீ பெங், எதிர்க்கட்சிக் கூட்டணியில் எதிர்க் கருத்துகள் தெரிவிக்க வழியில்லாமல் போய்விட்டதால் சுயேச்சை உறுப்பினராகப் போவதாக அறிவித்தார்.
“கட்சித் தலைவர்களைப் பகிரங்கமாகக் குறை கூறக் கூடாது என்று என்னிடம் சொல்லப்பட்டது. பிகேஆர் கட்சி பிரதிநிதித்த நீதியும் பொறுப்பேற்புத் தன்மையும் இதுவல்ல” என்று செய்தியாளர் கூட்டத்தில் அவர் சொன்னார்.
கட்சியிலிருந்து விலகும் மற்றொருவர் பிகேஆர் கட்சியின் முன்னாள் தலைமைச் செயலாளர் சலாஹுதீன் ஹஷீம். இவர் நாடாளுமன்ற உறுப்பினர் அல்ல.
அதே செய்தியாளர் கூட்டத்தில் பேசிய ஹஷீம், எதிர்வரும் நாட்களில் மேலும் பலர் கட்சியிலிருந்து விலகுவார்கள் என்று நம்புவதாகத் தெரிவித்தார்.
“எண்ணிக்கை பத்துக்கு மேல் இருக்கலாம். ஆனால், அவர்கள் அனைவரும் ஒரே சமயத்தில் விலகமாட்டார்கள். ஒவ்வொருவராக அல்லது இருவராக விலகுவார்கள்” என்றார் அவர்.
பிகேஆர் கட்சி புதிய உறுப்பினர்களுக்குச் சாதகமாக நடந்துகொள்வதாகவும், விசுவாசிகளை ஓரங்கட்டுவதாகவும் இவர் கூறினார்.