பலருக்கு 10 மணிநேரத் தூக்கமே அதிகம். ஆனால் உதவி விற்பனையாளராகப் பணிபுரியும் 29 வயது டேமியன் இங் இடையிடையே சாப்பிட்டுக் குளிக்கும் நேரம் போக மூன்று வாரங்களுக்குத் தொடர்ந்து தூங்கக் கூடியவர்.
இவருக்கு அபூர்வமான நோய் கண்டிருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
‘கெவின் கிளைன் சின்ட்ரம்’ எனப்படும் இந்த அபூர்வ நோய் அமெரிக்காவில் கிட்டத்தட்ட 200,000 பேரை பாதிப்பதாக தி நியூ பேப்பர் செய்தி ஒன்று தெரிவிக்கிறது.
இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பல வாரங்கள், சொல்லப்போனால் பல மாதங்கள் சாதாரணமாக சாப்பிட்டுத் தூங்குவர்.
ஆனால் தீடிரென நாட் கணக்கிலொ அல்லது வாரக் கணக்கிலொ தூங்க ஆரம்பிப்பர்.
இடையே இவர்கள் தூக்கத்திலிருந்து மீண்டாலும் இவர்கள் நிலைதடுமாறி இருப்பதுடன் தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்று அறியாமல் இருப்பர் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
தமது நோய் பற்றிக் கூறும் திரு இங்,
“இம்மாதிரி சமயங்களில் எனக்கு மிகவும் சோம்பலாகவும் சோர்வாகவும் இருக்கும். உலகில் என்ன நடப்பது என்றே தெரியாது. அனைத்துமே மங்கலாகத் தெரியும்.
“இப்படி வாழ்நாள் முழுதும் நடப்பதால் என்போன்றவர்களால் வழக்கமான வாழ்க்கை வாழ இயலாத நிலை உள்ளது,” என்றார் திரு இங்.
திரு இங்கின் பிரச்சினை பற்றிக் குறிப்பிட்ட சிங்கப்பூர் பொது மரு£த்துவமனை தூக்க நோய் பிரிவைச் சேர்ந்த டாக்டர் லிம் லி லிங், “இது சரிவரப் புரிந்துகொள்ளப்படாத சிக்கலான பிரச்சினை.
“சிங்கப்பூரில் இத்தகைய தீராத தூக்க நோயால் அவதிப்படுபவர்கள் மிகக் குறைவு,” என்றார்.
“அரிதாக ஏற்பட்டக்கூடிய இந்த நோய்க்கான காரணம் தெரியவில்லை,” என்று கூறினார் தேசிய நரம்பியல் மருத்துவ நிலையத்தைச் சேர்ந்த இணை பேராசிரியர் லொ ஙய்.