நாட்டின் மக்கள் அனைவரும் வாழ்க்கையில் சிறக்க சிங்கப்பூர் தொடர்ந்து வாய்ப்புகளை உருவாக்கித் தந்துள்ளது.
அந்த வாய்ப்புகளை இதுவரை தவற விட்டவர்களுக்கும் வாழ்வில் மேலும் உயர விரும்புவர்களுக்கும் அருமையான ஒரு சந்தர்ப்பத்தை அளிக்கிறது இந்த ஆண்டின் வரவு செலவுத் திட்டம்.
இது ஓராண்டுக்கான திட்டம் மட்டுமல்ல. சிங்கப்பூரின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கான
10 ஆண்டுத் திட்டம்.
உலகின் முதல்நிலை நாடாகும் நீண்ட பயணத்தை வேகப்படுத்தியுள்ள சிங்கப்பூர், எல்லா மக்களுக்கும் தரமிக்க வாழ்க்கையை அமைத்துத் தந்து, துடிப்பும் தனித்தன்மையும் மிக்க உலக நகராக சிங்கப்பூரை உருவாக்கும் முயற்சிகளில் சுறுசுறுப்புடன் இறங்கியுள்ளது.
கடந்த வாரம் வரவு செலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்து பேசிய நிதி அமைச்சர் தர்மன் சண்முகரத்னம், “அடுத்த 10 ஆண்டுகளில் சிங்கப்பூரின் பொருளியலை புதிய நிலைக்குக் கொண்டு செல்லத் தேவையான திறன்களை வளர்ப்பதை இந்த ஆண்டின் வரவு செலவுத் திட்டம் இலக்காகக் கொண்டுள்ளது,” என்று குறிப்பிட்டார்.
“இதில் மனித வளத்தையும் மற்ற வளங்கையும் அதிகமாகப் பயன்படுத்திக்கொண்டு பொருளியலை வளர்ப்பதற்கு பதிலாக நமது முயற்சிகளின் தரத்தை உயர்த்த வேண்டும்,” என்றார் அவர்.
பொருளியல் மறு உருவாக்கத்துக்காக $7 பில்லியன் செலவிடப்படவுள்ளது. இந்தப் பெரும் திட்டத்தில் நிறுவனங்கள், தொழில்களுடன் தனி மனிதரின் முன்னேற்றத்துக்கும் ஏராள வாய்ப்புகள் உள்ளன.
குறிப்பாக, சமூகத்தின் அடித்தட்டில் உள்ள 20% மக்கள் தங்களை உயர்த்திக்கொள்ள அருமையான நேரம் இது.
புதிய வேலைகள் உருவாக்கப்பட உள்ளன. அந்த வேலைகளைச் செய்வதற்கு தேவையான திறன் பயிற்சிகளும் அளிக்கப்பட உள்ளன.
இதற்காக தேசிய உற்பத்தி திறன், தொடர் கல்வி மன்றம் என புதிய அமைப்பு உருவாக்கப்பட உள்ளது.
அனைத்து நிலைகளில் உள்ளவர்களும் தங்களை எல்லா வகையிலும் மேம்படுத்தித் கொள்ள இது சரியான சந்தர்ப்பம்.
கல்வித் தேர்ச்சி, திறன் மேம்பாட்டு, புதிய வேலைப் பயிற்சி என பல வகையிலும் ஒருவர் தம்மை உயர்த்திக் கொள்வதற்கான உதவிகளை அரசாங்கம் அளிக்கிறது.
இலவசமாக ஒரு சில நாட்களுக்கு மீனைப் பெறுவதை விட, சொந்தமாக மீன் பிடிக்கக் கற்றுக்கொள்வது சாலச் சிறந்தது. கையில் வித்தை இருந்தால் சொந்த நாட்டில் மட்டுமின்றி எந்த நாட்டிலும் எப்படியும் பிழைத்துக் கொள்ளலாம்.
சிங்கப்பூர் இந்தியக் குடும்பங்கள் சில இன்னமும் பின்தங்கிய நிலையில் உள்ளது குறித்து சிண்டாவின் தலைவர் டாக்டர் பாலாஜி சதாசிவன் அண்மையில் கவலை தெரிவித்திருந்தார்.
முன்னேறுவதற்கு இதுவரையில் கிடைத்த சந்தர்ப்பங்களை இந்திய சிங்கப்பூரர்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டார்களாக என்று தெரியவில்லை.
வேலை வாய்ப்புச் சந்தைகளில் பொதுவாக குறைவான இந்தியர்களையே காண முடிகிறது.
எங்கே போவது, எப்படி உதவி பெறுவது என்பதை மக்களுக்கு எடுத்துச் சொல்வதில் அடித்தள அமைப்புகளின் உதவி தேவையாக இருக்கிறது. வழி தெரியாமல் தவிக்கும் குதிரைகளை குளத்துக்கு அழைத்துச் செல்வது முக்கியம்.
வாய்ப்பு வீட்டு வாசல் கதவைத் தட்டுகிறது. புத்திசாலித்தனமாக அதைப் பயன்படுத்திக் கொண்டால் வருங்காலம் வளமாக இருக்கும் என்பது உறுதி.