fontsize: 60% 70% 80% 90%

பேராக் ஆட்சி மன்ற உறுப்பினர் எண்ணிக்கையில் மாற்றமில்லை

மலேசியாவின் பேராக் மாநிலத்தில் தற்போது ஆறாக இருக்கும் ஆட்சிமன்ற உறுப்பினர் எண்ணிக்கையை அதிகரிக்கும் எண்ணம் தமக்கு இல்லை என்று பேராக் முதலமைச்சர் ஜாம்ரி அப்துல் காதிர் கூறியுள்ளார்.
மாநில ஆட்சிமன்றத்தில் காலியாக உள்ள நான்கு இடங்களை நிரப்புவதில் ஜாம்ரி சிரமத்தை எதிர்நோக்குகிறார். அந்த எண்ணிக்கையை விரிவுபடுத்தினால் அம்னோவுக்குள் அதிகாரப் போராட்டம் ஏற்பட வழிவிடும் என்று கருதப்படுகிறது.
எதிர்க்கட்சி கூட்டணியின் பத்து மாத கால ஆட்சியை கவிழ்ப்பதற்கு கட்சி மாறியதன் மூலம் உதவிய தேசிய முன்னணி ஆதரவு உறுப்பினர்கள் மூவரை அவர் தேர்வு செய்வாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
ஆகவே ஜாம்ரி, நடப்பு எண்ணிக்கையை தொடர்ந்து நிலை நிறுத்துவதன் வழி அந்த விஷயத்தை ஒதுக்கி வைப்பது என்று முடிவு செய்திருப்பதாக தோன்றுகிறது.
அண்மையை எதிர்காலத்தில் ஆட்சிக் குழுவில் மாற்றம் ஏதும் இருக்காது என்று அவர் அறிவித்துள்ளார்.
அதே வேளையில் தங்களுடைய திறமைகளை மெய்ப்பிப்பதற்கு நடப்பு ஆட்சிமன்ற உறுப்பினர்களுக்கு போதுமான அவகாசம் வழங்கப்படும் என்றும் அவர் சொன்னார்.

Copyright © 2006 Singapore Press Holdings Ltd. Co. Regn. No. 198402868E. All rights reserved.
82, Genting Lane, Singapore 349567 Tel: 6388 3838