fontsize: 60% 70% 80% 90%

இலக்கை நோக்கி

Bookmark and Share

இந்திய மாணவர்கள் கணிதம், அறிவியல் பாடங்களில் பின்தங்கி இருப்பதை சுட்டிக்காட்டி மீண்டும் கவலை தெரிவித்திருக்கிறார் அமைச்சர் டாக்டர் பாலாஜி சதாசிவன்.
இந்திய மாணவர்களுக்கு கணக்கு பல காலமாகவே பிரச்சினையாக உள்ளது. சிண்டாவின் ஸ்டெப் துணைப்பாட வகுப்பு போன்ற முயற்சிகளால் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. என்றாலும் தேசிய சராசரியுடன் ஒப்பிட கணித பாடத்தில் இன்னமும் 10% பின்தங்கிய நிலையிலேயே இந்திய மாணவர்களின் தேர்ச்சி உள்ளது.
இந்திய மாணவர்கள் சிலரின் பின்தங்கிய நிலைக்கு குடும்பச் சூழலும் ஒரு காரணமாக இருக்கிறது.
பெரும்பாலும் பிரச்சினைகள் நிறைந்த குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளே கல்வியில் பின்தங்கி இருப்பதைப் புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.
அதனால் துணைப்பாட வகுப்புகளையும் பாட நேரத்தையும் அதிகரிப்பதால் மட்டும் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க முடியும்.
சமூகத்தின் அடிப்படைப் பிரச்சினைகளை ஆராய்ந்து அதைத் தீர்ப்பதற்கான வழிமுறைகளைக் கண்டறிய வேண்டும் என சிண்டாவின் தலைவருமான டாக்டர் பாலாஜி சதாசிவன் ஆண்டுத் தொடக்கத்தில் கூறியிருந்தார்.
உதவி தேவைப்படும் இந்தியக் குடும்பங்களை அடையாளம் காண பல சிறந்த வழிகளை சமூகம் கண்டறிய வேண்டும் என டாக்டர் தற்போது வலியுறுத்தியுள்ளார்.
இந்தியக் குடும்பங்களின் சிக்கல்களுக்கு மணவிலக்கு, தாய் அல்லது தந்தையை மட்டுமே கொண்ட பிள்ளைகள், குறைந்த வருமானம் போன்ற நலிவுகள் காரணங்களாக உள்ளன. இந்த நலிவுகளில் இருந்து மீள்வதற்கு உதவி, ஒத்தாசை, ஆலொசனை, வழிகாட்டுதல் தேவைப் படுகின்றன.
மற்றவர்களை அணுகி உதவி கேட்பதற்கு அல்லது ஆலொசனை பெறுவதற்கு இந்தியர்கள் இயல்பாகவே தயங்குவார்கள்.
அதனால் பிரச்சினை உள்ள குடும்பங்களை சமூக அமைப்புகள்தான் தேடிச் செல்ல வேண்டும்.
முதலில் அவர்களது உடனடிப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவேண்டும். பிறகு மேம்பாட்டுக்கான திட்டங்களில் அவர்களை ஈடுபடுத்த வேண்டும்.
கடலையே அறியாதவர்களிடம் மீன் பிடிப்பது பற்றி உரை நிகழ்த்துவதில் அர்த்தமில்லை.
முதலில் அவர்களை கடலுக்கு அழைத்து வர வேண்டும். மீன் பிடிப்பதில் அவர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும். பின்னர் மீன் பிடிக்கச் சொல்லத் தரவேண்டும்.
பிரச்சினைகளில் உள்ளவர்களிடம் எதிர்காலம் குறித்துப் பேசுவதும், அதற்காகத் திட்டமிட வைப்பதும் எளிதான காரியமல்ல. ஆனால் முடியாததல்ல.
சமூகம் ஒன்றுபட்டு முயற்சி எடுத்தால் ஒட்டுமொத்த முன்னேற்றம் சாத்தியமாகும்.
சிண்டா, மக்கள் கழக நற்பணிப் பேரவையின் கூட்டணி கடந்த ஆண்டு பல வெற்றிகளைத் தந்திருப்பதாக இரு அமைப்பின் தலைவர்களும் தெரிவித்துள்ளனர்.
உதவி தேவைப்படும் குடும்பங்களை அடையாளம் கண்டு உதவுவதிலும், பின்தங்கியிருக்கும் மாணவர்களை முன்னேற்றுவதிலும் இரு பெரும் அமைப்புகளும் இணைந்து உதவிக் கரம் நீட்ட முடியும்.
நீள்கின்ற கையைப் பிடித்துக் கொண்டு உயர்ந்த படிக்குச் செல்லும் வாய்ப்பை சமூகத்தினரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளும் முனைப்பு வந்தால் இந்திய சமூகம் தன் முன்னேற்ற இலக்கை விரைவில் அடைய முடியும்.

Copyright © 2006 Singapore Press Holdings Ltd. Co. Regn. No. 198402868E. All rights reserved.
82, Genting Lane, Singapore 349567 Tel: 6388 3838