fontsize: 60% 70% 80% 90%

வளம் பெருக திறன் பெருக வேண்டும்

Bookmark and Share

பொருளியல் நெருக்கடிக்குப் பிறகான உலகப் பொருளியல் சூழல் மிகவும் மாறுபட்டது.
முதலீடுகள், சந்தைகள், தொழில்கள், ஊழியரணி, வேலை முறைகள் அனைத்திலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
புதிய உலகின் புதிய பொருளியலில் வெற்றி பெற சிங்கப்பூர் புதிய உத்திகளைக் கையாள வேண்டியுள்ளது.
பொருளியல் வளர்ச்சிக்கு சிங்கப்பூரின் தலைவர்கள் வலியுறுத்திக் கூறும் வழி முறை, உற்பத்தித் திறனை அதிகரிப்பது.
பிரதமர் லீ சியன் லூங்கும், மூத்த அமைச்சர் கோ சோக் டோங்கும் உற்பத்தித் திறனை அதிகரிக்க வேண்டிய அவசியம் பற்றி கடந்த இரு நாட்களாகப் பேசியுள்ளனர்
பொருளியல் வளர்ச்சிக்கான பரிந்துரைகளைப் பொருளியல் உத்திகள் குழு பிப்ரவரி முதல் தேதி வெளியிட உள்ளது. குழுவின் முக்கிய பரிந்துரையாக உற்பத்தித் திறன் அதிகரிப்பு இடம்பெறும் என்று மூத்த அமைச்சர் கோ சோக் டோங் கோடி காட்டியுள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளில் சிங்கப்பூர் சராசரியாக
5% வளர்ச்சியைக் கண்டு வந்தது. ஆனால் உற்பத்தித் திறன் சராசரியாக ஆண்டுக்கு 1% மட்டுமே உயர்ந்து வந்துள்ளது.
ஊழியர் எண்ணிக்கை அதிகரித்ததால் குறைந்த உற்பத்தித் திறனுடன், அதிக வளர்ச்சி சாத்தியமானது. இந்த ஊழியர்களில் பெருமளவினர் வெளிநாட்டு ஊழியர்கள்.
தற்போது வெளிநாட்டு ஊழியர்கள் மட்டுப் படுத்தப்பட்டுள்ள நிலையில் அரசாங்கம் முன்னுரைத்துள்ள
3 முதல் 4 விழுக்காட்டு வளர்ச்சியை அடைய, உற்பத்தித் திறன் இரண்டு மடங்காக வேண்டும் என்பது மூத்த அமைச்சரின் கணிப்பு.
அதாவது ஒருவர் பலரின் வேலைகளைச் செய்வது.
கடுமையாகவும் புத்திசாலித்தனமாகவும் வேலை பார்ப்பதுடன் புதிய திறன்களையும் வளர்த்துக் கொண்டால் இது சாத்தியமாகும் என்று திரு கோ கூறியுள்ளார்.
பெல்ஜியத்தில் அவர் சந்தித்த சேவைத் துறை ஊழியர் ஒருவர் 10 வாடிக்கையாளர்களைக் கவனிக்கிறார். காப்பி கலக்கித் தருவது, கட்டணம் பெறுவது, சுத்தம் செய்வது எல்லாவற்றையும் அவர் ஒருவரே செய்கிறார்.
ஆனால் சிங்கப்பூரில் ஒருவருக்கு ஒரு சேவையாளர் தேவைப்படுகிறது. இந்தப் போக்கு மாற வேண்டும் என்பது மூத்த அமைச்சரின் கருத்து.
வெளிநாட்டு ஊழியர்களையே சிங்கப்பூர் எப்போதும் சார்ந்திருக்க முடியாது. சிங்கப்பூரின் பொருளியல் சிங்கப்பூரர்களைச் சார்ந்து இருப்பதே சிறந்தது.
சிங்கப்பூரர்கள் உழைப்பதற்குச் சளைத்தவர்கள் அல்லர். தொழில்துறையில் பல மாற்றங்களைச் சந்தித்து வந்தவர்கள் சிங்கப்பூரர்கள். காலத்துக்கும் தேவைக்கும் ஏற்ப தங்களை மாற்றிக் கொள்ள சிங்கப்பூரர்களால் இயலும். அதற்கான உதவிகளையும் ஆதரவையும் அரசாங்கமும் அள்ளி வழங்கும்.
புதிய திறன்களைப் பெற்று, புதிய சிந்தனைகளுடன் புத்திசாலித்தனமாகச் செயல் பட்டால் நவீன தொழில்நுட்ப உதவியுடன் 10 பேரின் வேலையை ஒருவர் செய்ய முடியும். அதனால் உற்பத்தித் திறன் பெருகுவதுடன் வருமானமும் கூடும். வளமும் பெருகும்.
நாட்டின் பொருளியல் வளர்ச்சி உச்ச வரம்பை எட்டும். சிங்கப்பூரர்கள் புதிய பொருளியல் உலகில் தாக்குப்பிடித்து முன்னேற முடியும்.

Copyright © 2006 Singapore Press Holdings Ltd. Co. Regn. No. 198402868E. All rights reserved.
82, Genting Lane, Singapore 349567 Tel: 6388 3838