இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 2- 0 என்று வெற்றி பெற்று ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசையில் முதன் முறையாக முதலிடம் பிடித்த இந்திய அணி வீரர்களுக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தலா ரூ.25லட்சம் பரிசு அறிவித்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணிக்கு ஞாயிற்றுக்கிழமை பொன்னான நாள். தனது 77 ஆண்டு கால டெஸ்ட் வரலாற்றில் முதல் முறையாக ஐசிசி அனைத்துலகத் தர வரிசையில் ‘நம்பர்-1’ இடம் பெற்றுச் சாதித்தது.
இப்பெருமையைப் பெற இலங்கைக்கு எதிரான மும்பை டெஸ்ட் வெற்றி முக்கியக் காரணமாக அமைந்தது.
இந்தச் சாதனைக்கு வழிவகுத்த இந்திய அணி வீரர்கள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.25 லட்சமும், பயிற்சியாளர் உள்பட அணியின் மற்ற உதவியாளர்கள் மற்றும் தேர்வுக் குழு உறுப்பினர்களுக்குத் தலா ரூ.10 லட்சமும் பரிசாக வழங்கப்படும் என்று இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் ஷசாங் மனோகர் அறிவித்தார்.
இந்திய அணிக்கு இந்திய அதிபர், பிரதமர், காங்கிரஸ் தலைவர் சோன¬யா, எதிர்க்கட்சித் தலைவர் அத்வான¬ முதற்கொண்டு அனைவரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ஆனால் அடுத்தடுத்து டெஸ்ட் போட்டிகள் குறைவாக இருப்பதாலும், அடுத்தடுத்த நிலையில் உள்ள அணிகள் ஓரிரு புள்ளிகள் வித்தியாசத்திலேயே இருப்பதாலும், இந்த முதலிடத்தைத் தக்கவைக்க இந்தியா போராட வேண்டும் என்று கிரிக்கெட் வீரர்கள் பலரும் கூறி உள்ளனர்.