fontsize: 60% 70% 80% 90%

கிழக்கு ஆசிய தாராள வர்த்தக வட்டாரம்: ஆசியானுக்குப் பிரதமர் லீ வலியுறுத்து

கிழக்கு ஆசிய தாராள வர்த்தக வட்டாரம் தொடர்பில் ஒன்றாகச் சேர்ந்து பாடுபடும்படி ஆசியானை சிங்கப்பூர்ப் பிரதமர் லீ சியன் லூங் வலியுறுத்தினார். கிழக்கு ஆசியாவுடன் பரந்த பொருளியல் பங்காளித்துவத்தைப் பலப்படுத்த சேர்ந்து செயல்படும் படியும் அவர் பத்து நாடுகள் அங்கம் வகிக்கும் ஆசியானைக் கேட்டுக்கொண்டார். இப்படிச் செய்தால் பரந்த அளவிலான வட்டார பொருளியல் ஒருங்கிணைப்பு உருவாக உதவியாக இருக்கும் என்று பிரதமர் சொன்னார். திரு லீ, தாய்லாந்தில் நேற்று ஆசியான் 15வது உச்சநிலை மாநாட்டில் கலந்துகொண்டார். இந்த வட்டாரத்தை ஆகாய, கடல், தொலைத்தொடர்பு மூலம் இணைக்கவேண்டும் என்று இந்த வட்டாரம் விரும்புகிறது. இந்த விருப்பம் உள்ளிட்ட வட்டார பிணைப்பு தொடர்பில் ஆசியான் தலைவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டனர். அதைப் பிரதமர் திரு லீ, சுட்டிக் காட்டினார். இந்தியா, சீனா உள்ளிட்ட தன்னுடைய பேச்சுவார்த்தை பங்காளி நாடுகளுடன் ஆசியான் தனது தொடர்புகளைப் பலப்படுத்த வேண்டும் என்றும் பிரதமர் யோசனை தெரிவித்ததார். இதற்கிடையே தாய்லாந்தில் உச்சநிலைக் கூட்டம் நடத்திய ஆசியத் தலைவர்கள், உலகுக்குத் தலைமை வகிக்கும் திட்டம் பற்றி விவாதித்தார்கள். ஐரோப்பிய சமூகம் பாணியில் அமைந்த பெரிய வட்டாரத்தை ஏற்படுத்தி அதன் மூலம் உலகின் மிகப் பெரிய பொருளியல் சக்தி யாகி உலகுக்குத் தலைமை வகிப்பது ஆசியாவின் கனவு. பொருளியல் நெருக்கடியில் இருந்து மீண்டு வருவதற்கான உலக முயற்சிகளில் தலைமைப் பணியை ஏற்கக்கூடய ஆற்றலைக்கொண்ட கிழக்கு ஆசியச் சமூகத்தை ஏற்படுத்தலாம் என்று ஜப்பான் பிரதமர் யூகியோ ஹட்டோயாமா யோசனை தெரிவித்தார். இந்த யோசனை நேற்றைய கூட்டத்தில் முக்கியமாக விவாதிக்கப்பட்டது.
Copyright © 2006 Singapore Press Holdings Ltd. Co. Regn. No. 198402868E. All rights reserved.
82, Genting Lane, Singapore 349567 Tel: 6388 3838