You are here

பிலிப்பீன்சில் டெங்கி காய்ச்சல் தடுப்பூசி அச்சம்; விசாரணைக்கு உத்தரவு

மணிலா: பிலிப்பீன்சில் டெங்கி காய்ச்சல் தொற்றாமல் இருக்க சிறுவர்களுக்கு போடப்பட்டு வந்த தடூப்பூசி மருந்தினால் சுகாதார ஆபத்துகள் ஏற்படக் கூடும் என்று சென்ற வாரம் பிரெஞ்சு மருந்து தயாரிப்பு நிறுவனமான சனோஃபி அறி வித்ததைத் தொடர்ந்து அது குறித்த விசாரணையை பிலிப்பீன்ஸ் தொடங்கியுள்ளது. அந்நிறுவனத்தின் அந்த அறிவிப்பைத் தொடர்ந்து சிறுவர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை பிலிப்பீன்ஸ் சுகாதார இலாகா நிறுத்தி வைத்துள்ளது. பிலிப்பீன்சில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இதுவரை 730,000க்கும் மேற்பட்ட சிறுவர்களுக்கு ‘டெங்வேக்சியா’ என்று அழைக்கப்படும் டெங்கி தடுப்பூசி போடப்பட்டுள்ளது. பிலிப்பீன்ஸ் முன்னாள் அதிபர் பெனிக்னோ அக்கினோ ஒப்புதல் அளித்ததன் பேரில் 3.5 பில்லியன் பெசோ (S$94 மில்லியன்) டாலர் மதிப்பிலான டெங்கி தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டது. ஆனால் தடுப்பூசி போடப்பட்ட இந்த சிறுவர்களில் எவரும் மரணம் அடையவில்லை என்று சனோஃபி நிறுவனம் தெரிவித்துள்ளது.