You are here

போலிசிடமிருந்து தப்ப முயற்சி: ஆடவருக்குச் சிறை

சாலையில் போலிசார் அமைத்திருந்த தடுப்பைப் பார்த்ததும் காரைப் போக்குவரத்துக்கு எதிர்திசையில் ஓட்டி தப்பிக்க முயன்ற ஆடவருக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த பிப்ரவரி மாதம் 14ஆம் தேதியன்று அதிகாலை 2 மணிக்கு விக்டோரியா ஸ்திரீட்டை நோக்கி முகம்மது அமிருதீன் முகம்மது ஷஃபி கார் ஓட்டிக்கொண்டிருந்தார். ஏற்கெனவே உரிமம் இல்லாமல் கார் ஓட்டிய குற்றுத்துக்காக அவர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார். போலிசாரின் சாலை தடுப்பைப் பார்த்ததும் போக்குவரத்துக்கு எதிர் திசையில் அவர் அபாயகரமான முறையில் மணிக்கு 80லிருந்து 90 கிலோ மீட்டர் வேகத்தில் ஓட்டிச் சென்றார்.

கேலாங் லோரோங் 14ல் அவர் காரிலிருந்து வெளியாகி தப்பி ஓடினார். உரிமம் இல்லாது கார் ஓட்டியது, கார் உரிமையாளரின் அனுமதி இல்லாது கார் ஓட்டியது, காப்புறுதித் திட்டம் இல்லாது கார் ஓட்டியது, போதைப் பொருள் உட்கொண்டது, போதைப் பொருள் வைத்திருந்தது ஆகிய குற்றத்துக்காக 35 வயது அமிருதீனுக்கு இரண்டு ஆண்டுகள் ஒன்பது மாதச் சிறைத் தண்டனை, $3,000 அபராதம், வாகனம் ஓட்ட மூன்று ஆண்டுகள் தடை ஆகியவை நேற்று விதிக்கப்பட்டன.