You are here

மனம் வெதும்பிய பாலிவுட் கதாநாயகி

  • அலியா பட்.

சரியான வாய்ப்புகள் அமைந்தால் 90 வயது வரை தன்னால் நடிக்க இயலும் என்கிறார் இந்தி நடிகை அலியா பட். திரையுலகில் நடிகைகளுக்கு மட்டும் உரிய முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை என்பதே இவரது ஆதங்கமாம். அதனால்தான் நடிகைகள் ஒரு சில ஆண்டுகளிலேயே சினிமாவில் இருந்து விலக வேண்டியுள்ளது என்று வருத்தப்படுகிறார். “நடிகர்களுக்கு மட்டும் முதிர்ந்த வயது வரை நடிப்பது போன்ற கதைகளைத் தயார் செய்து கொடுக்கிறார்கள்.

ஆனால் எங்களுக்கு அப்படி அல்ல. இளம் வயது என்றால் கதாநாயகியாக நடிக்க வேண்டும். அதன் பிறகு நாயகிகளுக்கு அம்மாவாக நடிக்க வேண்டும். “நடிகைகளுக்காக வித்தியாசமான கதைகளைத் தயாரிப்பது இல்லை. வித்தியாசமான முயற்சிகளை நமது இயக்குநர்கள் மேற்கொள்வதும் இல்லை,” என்கிறார் அலியா. பிரபல இந்தி இயக்குநர் மகேஷ்பட்டின் மகளான இவர் நடித்த பல படங்கள் விருதுகளைப் பெற்றுள்ளன. அலியாவும் பல விருதுகளைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் திரையுலகத்தின் போக்கு குறித்தும் நடிகைகளுக்கு உள்ள மதிப்பு குறித்தும் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் இவ்வாறு மனம் வெதும்பியுள்ளார் அலியா.