You are here

செல்சி, மான்செஸ்டர் சிட்டி இன்று பலப்பரிட்சை

லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் ரசிகர்களுக்கு இன்று பின்னிரவு ருசிமிக்க ஆட்டம் ஒன்று காத்திருக்கிறது. லீக் தொடர் தொடங்கி சில வாரங்களே ஆகியிருக்கும் நிலையில் செல்சி, மான்செஸ்டர் சிட்டி ஆகிய இரு முன்னணிக் குழுக்கள் இன்று பின்னிரவு ஒன்றோடு ஒன்று மோதுகின்றன. லீக் தொடரில் ஆறு ஆட்டங்கள் முடிந்த நிலையில் பட்டியலில் முதல் இடம் பிடித்துள்ளது மான்செஸ்டர் சிட்டி. ஆறு ஆட்டங்களில் 21 கோல்களைப் போட்ட சிட்டி, லீக் பட்டியல் பந்தயத்தில் கடிவாளத்தைப் பிய்த்துக்கொண்டு ஓடிக் கொண்டிருக்கிறது. சிட்டி குழு தற்காப்பு, மத்தியத் திடல், தாக்குதல் என அனைத்துப் பிரிவுகளிலும் சிறப்பாகச் செயல்பட்டு வந்தாலும் தாக்குதலே அதன் முக்கிய பலமாக இருக்கிறது. எதிரணியை எதிர்த்து சரமாரியாக கோல் மழை பொழியும் சிட்டிக்கு ஒரே பின்னடைவு என்னவென்றால் அது அதன் முன்னணி ஆட்டக்காரர் செர்ஜியோவுக்கு ஏற்பட்ட காயமாகத்தான் இருக்கும்.