You are here

வடக்கு-தெற்கு, கிழக்கு-மேற்கு ரயில் தட சீரமைப்புப் பணிகள் 2024ல் முடிவுறும்

  • ST PHOTO: CHEW SENG KIM

எம்ஆர்டி வடக்கு-தெற்கு, கிழக்கு-மேற்கு ரயில் தடங்களில் தற்பொழுது நடைபெற்று வரும் சீரமைப்புப் பணிகள் 2024ஆம் ஆண்டில் முழுமையாக முடிவுறும் என்று போக்குவரத்து அமைச்சர் கோ பூன் வான் நேற்று தெரி வித்தார். எனினும், இந்தத் தடங்களின் முக்கிய கட்டமைப்பை மாற்றும் திட்டங்களினால் ரயில் நம்பகத் தன்மையைப் பொறுத்தவரை 2019ஆம் ஆண்டுவாக்கில் பெரும் மேம்பாடுகளை பயணிகள் அனுபவபூர்வமாக உணரலாம் என்றும் அவர் கூறினார்.

வடக்கு-தெற்கு, கிழக்கு- மேற்கு ரயில் தடங்களில் முக்கிய மேம்பாட்டுத் திட்டமாக விளங்கும் மூன்றாவது மின்னூட்டத் தடத்தின் நிறைவு நிகழ்ச்சியில் பங்கேற்று பீஷான் பணிமனையில் நேற்றுப் பேசியபோது திரு கோ மேற்கண்டவாறு கூறினார். வடக்கு-தெற்கு, கிழக்கு-மேற்கு ரயில் தடங்களின் முதல் மேம்பாட்டுத் திட்டமான ரயில் தண்டவாளங்களை நிலை நிறுத்தும் மரப் பிடிமானங்களை மாற்றி அவற்றுக்குப் பதிலாக கான்கிரீட் பிடிமானங்களை பொருத்தும் பணி 2016ஆம் ஆண்டு நிறைவுபெற்றதாகக் கூறினார் அமைச்சர். தற்பொழுது மூன்றாவது மின்னூட்டத் தடத் திட்டமும் நிறைவுபெற்றுவிட்டதால் நான்கு சீரமைப்புத் திட்டங்களில் இரண்டு பூர்த்தியடைந்துவிட்டதாக அவர் விளக்கினார். இதில், “ஒவ்வொரு முறையும் ஒரு முக்கிய கட்டமைப்பு மாற்றி அமைக்கப்படும்போது, ஒரு பெரிய முன்னேற்றம் நிகழ்கிறது,” என்றார் அவர்.