You are here

16வது கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற நடால்

நியூயார்க்: ஸ்பெயினின் டென்னிஸ் நட்சத்திரமான ரஃபயேல் நடால் (படம்) தமது மூன்றாவது அமெரிக்கப் பொது விருதை வென்றுள்ளார். இதுவே அவர் வென்றுள்ள 16வது கிராண்ட் ஸ்லாம் பட்டமாகும். நேற்று முன்தினம் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவின் கெவின் ஆண்டர்சனுடன் அவர் மோதினார். இதில் நடால் 6-3, 6-3, 6-4 எனும் நேர்செட்டுகளில் வாகை சூடி கிண்ணம் ஏந்தினார். அதுமட்டுமல்லாது, 3.7 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசுத் தொகையையும் அவர் தட்டிச் சென்றார். அனைத்துலகத் தரவரிசையில் முதலிடம் வகிக்கும் நடால், 2010 மற்றும் 2013ஆம் ஆண்டுகளிலும் அமெரிக்கப் பொது விருதை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஜூன் மாதத்தில் 10வது முறையாக பிரஞ்சுப் பொது விருது டென்னிஸ் போட்டியிலும் வெற்றி பெற்று கிண்ணம் ஏந்தி சாதனை படைத்தார்.

இந்தப் பருவத்துக்கான மற்ற இரண்டு கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் நடாலின் பரம வைரியான ராஜர் ஃபெடரர் வென்றார். ஆஸ்திரேலியப் பொது விருது டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டத்தில் நடாலை ஃபெடரர் வீழ்த்தி பட்டம் வென்றார். விம்பிள்டன் டென்னிஸ் போட்டியிலும் ஃபெடரர் வெற்றி பெற்றார்.