You are here

ரோஹிங்யா போராளிகளின் 1 மாத சண்டை நிறுத்தம்

  • படம்: ஏஎஃப்பி

யங்கூன்: மியன்மார் ராணுவத்துடன் சண்டையிட்டு வரும் ரோஹிங்யா போராளிகள் ஒரு மாதத்திற்கு சண்டை நிறுத்தத்தை பின்பற்றுவதாக அறிவித்துள்ளனர். டுவிட்டர் பக்கத்தில் அவர்கள் இத்தகவலை தெரிவித்துள்ளனர். சண்டையால் பாதிக்கப்பட் டுள்ள பகுதிகளுக்கு மனிதாபி மான உதவிகள் கிடைப்பதற்கு வசதியாக இந்த சண்டை நிறுத்தத்தை அறிவித்திருப்பதாக அர்சா என்றழைக்கப்படும் அராகன் ரோஹிங்யா மீட்பு ராணுவம் அதன் அறிக்கையில் தெரிவித்துள்ளது. மனிதாபிமான உதவிப் பணிகளில் ஈடுபட்டுள்ளவர்கள் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இன, சமய பாகுபாடு இன்றி உதவ வேண்டும் என்றும் போராளிகள் குழு கேட்டுக்கொண்டுள்ளது.

மனிதாபிமான ரீதியில் மியன்மார் ராணுவமும் செப்டம்பர் 9ஆம் தேதி முதல் அக்டோபர் 9ஆம் தேதி வரையிலான இந்த சண்டை நிறுத்தத்தின்போது ஆயுதங்களைக் கைவிட வேண்டும் என்று அக்குழு வலியுறுத்தியது. ரோஹிங்யா போராளிகள் கடந்த ஆகஸ்ட் 25ஆம் தேதி மியன்மாரின் ராக்கைன் மாநிலத்தில் 30 போலிஸ் சாவடிகள் மீது ஒருங்கிணைந்த தாக்குதல்கள் நடத்தியதிலிருந்து அம்மாநிலத்தில் வன்முறைச் சம்பவங்கள் வெடித்துள்ளன.

போராளிகளை ஒடுக்க ராணுவம் கடும் தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. பல வீடுகள் தீ வைத்துக் கொளுத்தப்பட்ட நிலையில் கடந்த இரு வாரங்களில் மட்டும் ரோஹிங்யா மக்களில் கிட்டத்தட்ட 300,000 பேர் ராக்கைன் மாநிலத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளனர். அவர்களில் பலர் பங்ளாதே‌ஷிற்குள் நுழைந்துவிட்ட நிலையில் இன்னும் ஆயிரக்கணக்கானோர் எல்லை முகாம்களில் தங்கியுள்ளனர். முகாம்களில் தங்கியுள்ளனர். பாதிக்கப்பட்ட ரோஹிங்யா மக்களுக்கு உதவ, உதவிக் குழுக்களுக்கு 77 மில்லியன் டாலர் தேவைப்படுவதாக ஐநா கூறுகிறது.

மியன்மாரிலிருந்து தப்பியோடிய ரோஹிங்யா அகதிகள் பங்ளாதேஷ் அருகே தற்காலிக முகாம்கள் அமைப்பதை பங்ளாதேஷ் போலிசார் தடுக்கின்றனர். படம்: ஏஎஃப்பி