You are here

மெக்சிகோ நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 90 ஆக உயர்வு

  • படம்: ஏஎஃப்பி

மெக்சிகோ சிட்டி: மெக்சிகோவின் தெற்கு கடலோரப் பகுதிகளை உலுக்கிய 8.1 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 90 ஆக உயர்ந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வியாழக்கிழமை ஏற்பட்ட நில நடுக்கத்தின்போது இடிந்து விழுந்த கட்டடங்களின் இடிபாடுகளை அகற்றும் பணிகளும் பழுதடைந்த சாலைகளைச் சீர்படுத்தும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். நிலநடுக்கத்தால் மோசமாக பாதிக் கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அப்பகுதிகளில் நில அதிர்வுகள் ஏற்படுதால் மக்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப அஞ்சுகின்றனர். இந்நிலையில் சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங், மெக்சிகோ நிலநடுக்கத்தில் பலர் உயிரிழந்ததற்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொண்டுள்ளார். மெக்சிகோ அதிபருக்கு அனுப்பிய கடிதத்தில் திரு லீ, “உங்களின் திறமையான தலைமைத்துவத்தின் கீழ் இந்தப் பேரிடர் துயரத்திலிருந்து மெக்சிகோ மீண்டு வரும் என்று நான் நம்புகிறேன்,”என்று கூறியிருப்பதாக சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு அதன் அறிக்கையில் தெரிவித்தது.

நிலநடுக்கத்தின்போது இடிந்து விழுந்த கட்டடங்களின் இடிபாடுகளுக்கு இடையே தேடும் பணியில் சிறப்பு மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இடிபாடுகளிலிருந்து பலர் காப்பாற்றப்பட்ட நிலையில் மேலும் பல சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர். அப்பகுதியில் ஏற்படும் நில அதிர்வுகள் மீட்புப் பணிகளுக்கு இடையூறாக உள்ளது என்று மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர். படம்: ஏஎஃப்பி