You are here

விபத்தில் மனிதாபிமானத்துடன் செயல்பட்ட ஆடவருக்குப் பாராட்டு

  • படம்: ஃபேஸ்புக்

தனது வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளாக்கிய முதியவரை மனிதாபிமானத்துடன் செயல்பட்டு மருத்துவ மனைக்குக் கொண்டு சென்றவருக்குப் பாராட்டு மழை. கடந்த வாரம் வியாழக்கிழமை திரு அல்வின் ஹோ வழக்கம்போல் அலுவலகத்திற்கு தனது காரை ஓட்டிச் சென்றுள்ளார். அப்பொழுது வேறொரு கார் அவருடைய காருடன் மோதியது. மோதிய காரிலிருந்து வெளிவந்த 65 வயது முதியவர், திரு ஹோவிடம் மன்னிப்புக் கோரினார். தான் புற்று நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதால் மருத்துவமனைக்கு சென்று கொண்டிருப்பதாகவும் அந்த முதியவர் கூறினார்.

அந்த முதியவர் புற்றுநோயின் நான்காவது கட்டத்தில் இருப்பதால் திடிரென்று நினைவிழந்துள்ளார் என்றும் அதன் காரணமாகவே தன்னுடைய வாகனத்தின் மீது அவர் மோதியுள்ளார் என்றும் அறிந்துகொண்ட திரு ஹோ உடனடியாகத் தாமாகவே முன்வந்து அவரை மருத்துவ மனைக்குக் கொண்டு சென்றுள்ளார். மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சையை தொடங்கும் வரை ஆறுதலாக அந்த முதியவருடன் மருத்துவமனையிலும் இருந்துள்ளார். மெக்ஃபர்சன் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் டின் பெய் லிங் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் திரு அல்வின் ஹோவின் இந்த நற்செயலைப் பாராட்டியுள்ளார்.

நற்பண்பாளர் அல்வின் ஹோவுடன் மெக்ஃபர்சன் நாடாளுமன்ற உறுப்பினர் டின் பெய் லிங். படம்: ஃபேஸ்புக்