You are here

முன்னேற்றப் பாதையில் நவீன இந்தியா

இந்தியா 1947ஆம் ஆண்டு பிரிட்டனிடமிருந்து சுதந்திரம் பெற்றது முதல் பல்வேறு தடைகளைத் தாண்டி இன்றைய முன்னேற்ற நிலையை அடைந்துள்ளது. அண்மையில்தான் அது 70வது சுதந்திர தினத்தைக் கொண்டாடியது. இன்று சீனாவுக்கும் ஜப்பானுக்கும் அடுத்த நிலையில் இந்தியா மூன்றாவது பெரும் பொருளியல் சக்தியாக இருக்கின்றது. சீனா ஏறக்குறைய 600 மில்லியன் மக்களின் வறுமையை ஒழித்துள்ளது என்றும் அமெரிக் காவுக்கே சவாலாக விளங்குகிறது என்றும் கூறும் விமர்சகர்கள், இந்தியா அந்த அளவுக்கு சாதித்துள்ளதா என்றும் வினா தொடுக்கின்றனர்.

இந்தியா சோவியத் ரஷ்யாவுடன் இணைந்து தன்னுடைய முதல் எஃகு ஆலையை , மத்திய பிரதேசத்தில் கட்டியது. தவிரவும், சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே நடுநிலையாக இருந்த திபேத்தை 1950களின் மத்தியில் சீனா ஆக்கிரமித்து தன் பிரதேசமாக ஆக்கிக்கொண்டது முதல் அரசியல் பிரச்சினைகள் எழுந்தன. ஆன்மிகத் தலைவர் தலாய் லாமாவும் திபேத்தைவிட்டு அப்போதுதான் இந்தியாவுக்குப் புறப்பட்டார்.

அதற்குப்பின் 1962இல் இந்தியாவும் சீனாவும் போரில் ஈடுபட்டன. காரணம் விளக்கப்படாத அந்தப் போரில் கைப்பற்றப்பட்ட இந்தியப் பகுதிகள் இன்னமும் சீனாவிடமே உள்ளன. ஆனால், அந்தப் போருக்குப் பின்னர்தான் சோவியத் ரஷ்யாவுடன் இணைந்து, புதுடெல்லி அதன் ராணுவத்தை நவீன மயமாக்கியது. 1971ஆம் ஆண்டு பங்களாதேஷ் விடுதலைக்கு இந்தியா உறுதுணையாக இருந்தது. பங்களாதேஷ் விடுதலைப் போருக்குப் பின் இந்தியா அதன் முதல் அணுகுண்டையும் வெடித்துச் சோதித்தது.

இந்தியாவில் 1960களில் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டபோது, தென்மாநில உணவு வகைகளில் கோதுமையும் வட மாநிலங்களில் அரிசிப் பயன்பாடும் பிரபலமாயின. இதற்குப்பின் 1991ஆம் ஆண்டு திரு பி.வி. நரசிம்மராவ் தென்பகுதியிலிருந்து தேர்ந்தெடுக் கப்பட்ட முதல் பிரதமர் ஆனபின் நாட்டின் பல கட்டங்களிலும் துறைகளிலும் மாற்றங்கள் செய்யப் பட்டன. இன்றைய நிலையில், தென் மாநிலங்கள் 2.4 டிரில்லியன் அமெரிக்க டாலர் வருமானத்தை ஈட்டித்தருகின்றன. ஆண்டுதோறும் விமானச் சேவையும் 20 விழுக்காடு வளர்ச்சி கண்டுவருகின்றது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு வருமானம் விரைவில் பிரிட்டனையும் மிஞ்சிவிடும் என்று எதிர்பார்க்கப் படுகின்றது. 1975 முதல் 90 வரை இந்தியா பல வாய்ப்புகளைத் தவறவிட்ட காலக்கட்டம் என்று கூறப்படுகிறது. 1975ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட அவசரகாலச் சட்டம்தான் இந்திய ஜனநாயகத்தையே ஆட்டிவைத்தது என்பார்கள். இன்று இந்தியா தொலைத் தொடர்பு சாதன மேம்பாட்டிலும் வளர்ச்சி கண்டுவருகின்றது.

ஒரு காலத்தில் முழுமையான விவசாய நாடாக இருந்த இந்தியா இன்று சேவைத் துறையிலும் நாட்டம் கொண்டுள்ளது. மருந்துத் தயாரிப்புத் துறையிலும் அது வளர்ச்சி கண்டு வருகிறது. அண்மைய பொருள் சேவை வரிச் சட்டம் நாட்டின் வளர்ச்சியை மேம்படுத்தி இரண்டு விழுக்காட்டுப் புள்ளி மேம்பாட்டை எட்டிக் கொண்டிருக்கின்றது. இன்றைய பிரதமர் மோடியின் தலைமையில் நேரடி வெளிநாட்டு முதலீட்டையும் அது ஆதரித்து ஈர்த்து வருகின்றது. மத்திய ஆட்சி நிலையில் ஊழல் முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிட்டதாகக் கூறப் படுகிறது. கட்டுப்படியாகக் கூடிய வகையிலான விண்வெளித் திட்டங்களும் இந்தியாவை உயர்த்தி வருகின்றன.

அரசியல் வெற்றிக்கு செயல்திறனே முக்கியம் என்பதை இன்றைய இந்திய அரசியல்வாதிகள் உணர்ந்து வருகின்றனர். வரவிருக்கும் இந்தியாவின் குடியரசு தினத்தன்று ஆசியானின் பத்து நாட்டு தலைவர்களும் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டுள்ளனர். 1947ஆம் ஆண்டு முதல் அயராது பாடுபட்டு, பலவித இன்னல்களை எதிர்கொண்டு வளமான எதிர்காலத்தை நோக்கி நடைபோட்டுக்கொண்டிருக்கும் இந்தியா மேலும் பல துறைகளில் சாதனைகளைச் செய்துகாட்ட வேண்டுமென்பதே அனைவருடைய விருப்பமாக இருக்கும்.