You are here

காவல் அதிகாரி இடமாற்றத்துக்கு ரூ.10 லட்சம் லஞ்சம் கொடுத்த இருவர் கைது

புதுடெல்லி: காவல்துறை அதிகாரி இடமாற்றத்துக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் ராஜன்குமார், அருண் திவாரி ஆகிய இருவரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். டெல்லியில் காவல்துறை இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் பனய் சிங் மீனா. டெல்லி ஆர்.கே.புரத்தில் அரசு அதிகாரி காமேஷ்வர் என்பவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள அரசு குடியிருப்பில் வசித்து வந்தவர் ராஜன்குமார். இவர் தன்னை ஒரு அரசு அதிகாரி என்று கூறி வந்துள்ளார். இந்நிலையில் காவல்துறை இன்ஸ்பெக்டர் பனய் சிங் மீனா, தான் விரும்பிய ஒரு இடத்துக்கு இடமாற்றம் பெற்றுத் தருவதற்காக ராஜன்குமாரிடமும் அருண் திவாரி என்பவரிடமும் ரூ.10 லட்சம் லஞ்சம் கொடுத்துள்ளார்.

இதுதொடர்பாக ராஜன்குமார், அருண் திவாரி ஆகிய இருவரையும் சிபிஐ கைது செய்தது. ராஜன் குமாரிடம் இருந்து லஞ்சப்பணம் ரூ.7 லட்சமும் அருண் திவாரியிடம் இருந்து ரூ.3 லட்சமும் கைப்பற்றப்பட்டது. ராஜன் குமாருக்கு சொந்தமான இடங்களில் சி.பி.ஐ. அதிரடி சோதனை நடத்தியது. இதில், அங்கிருந்து ரூ.1 கோடியே 60 லட்சம் பணமும் ரப்பர் ஸ்டாம்புகளும் கைப்பற்றப்பட்டன என்று சிபிஐ செய்தித் தொடர்பாளர் ஆர்.கே. கவுர் கூறினார்.