You are here

எல்லைப் பாதுகாப்பு வீரர்களுக்கான உணவுப்பொருட்களில் ஊழல் என காணொளி பதிவேற்றம்

  • எல்லைப் பாதுகாப்பு வீரர்களுக்கான உணவுப்பொருட்களில் ஊழல் என காணொளி பதிவேற்றம்

புதுடெல்லி: எல்லைப் பாதுகாப்புப் படையில் மோசமான உணவு வழங்கப்படுவதாகவும் சில நேரங்களில் உணவு இல்லாததால் பசியுடன் படுக்கச் செல்வதாகவும் குற்றம்சாட்டிய வீரரின் காணொளிப் புகார் தொடர்பாக விசாரணை நடத்துமாறு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரவிட்டுள்ளார். இந்தியா-பாகிஸ்தான் எல்லை யில் பணிபுரியும் எல்லைப் பாதுகாப்புப் படையின் 29வது பட்டாலியனைச் சேர்ந்த தேஜ் பதூர் யாதவின் பேச்சு அடங்கிய காணொளி சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டுப் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

மேலும், தங்களுக்கு வழங்கப் படும் மூன்று வேளை உணவு களையும் அந்தக் காணொளிப் பதிவில் ஒவ்வொன்றாகக் காட்டி விளக்கினார் தேஜ். சகிக்க முடியாத மோசமான பருவ நிலைகளில் குடும்பத்தைப் பிரிந்து நாட்டைக் காக்கும் பணிபுரியும் வீரர்களுள் ஒருவரான தேஜ் பதூரின் பேச்சு மிகவும் உருக்கமாக இருந்தது. படை வீரர்களுக்கு உணவு தயாரிப்பதற்காக வழங்கப் படும் பொருட்களை உயர் அதிகாரி கள் ஏமாற்றி வெளிச்சந்தையில் விற்பனை செய்வதாகவும் தேஜ் தமது காணொளியில் குற்றஞ்சாட்டி இருந்தார்.

“இந்த விஷயத்தின் மீது கவனம் செலுத்துமாறு பிரதமரைக் கேட்டுக்கொள்கிறேன். இந்தக் காணொளியைப் பதிவு செய்த பிறகு நான் உயிரோடு இல்லாமலும் போகலாம். எனது அதிகாரிகள் கடுமையாக நடத்துகிறார்கள்” என்றும் தேஜ் தெரிவித்திருந்தார். இதைப் பற்றிய தகவல் அறிந்த மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுத்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு உள் துறை தலைமைச் செயலாளரைக் கேட்டுக்கொண்டுள்ளார்.